Monday, November 22, 2010

நவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்ட திகில் அனுபவம்

என் பெயர் நவரத்தினம். நண்பர்கள் என்னை நவ்ஸ் என்று அழைப்பார்கள். நான் என் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். அது ஒரு அடை மழை காலம். நல்ல குளிர் காற்று. மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு. பல இடங்களை சுற்றிப்பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இருள் லேசாக கவியத் தொடங்கியது.

இறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு!!! கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.