Thursday, September 24, 2009

சச்சின் டெண்டுல்கரின் நத்தைகூடு வீடு - பாந்திரா, மும்பைவடிவமைப்பாளர் : ஜாவிர் செநோசியின்


இடம் : பாந்திரா, மும்பை


நத்தைகூடு


வெளிச்சம், வண்ணம், வடிவம்


உட்புற தோட்டம்


ஒளி ஊடுருவும் தன்மை


கூடு


பாதை


கவிநயமான இடம்


தொலைக்காட்சி அறை


குளியலறை


சமையலறை


நுண்கலை


படுக்கை அறை

Sunday, September 20, 2009

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா - நிகழ்ச்சி துளிகளில் சில


18-செப்டெம்பர்-2009 வெள்ளிக்கிழமை அன்று தூர்தர்ஷனின் 50ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி துளிகளில் சில உங்களுக்காக.

ஈரோடு மகேஷ் மற்றும் பாவனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முதலில் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர்கள், என்ஜினியர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தூர்தர்ஷனின் சிறப்புகளை பற்றி பேசினார்கள்.தூர்தர்ஷன் "Reach the Unreachable" என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதாக குறிப்பிட்டனர்.

டாக்டர்.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தன்னுடைய உரையில், ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை தன்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதாக குறிப்பிட்டார். பாலமுரளிகிருஷ்ணாவை உருவாக்கியதை, தூர்தர்ஷனின் 50 ஆண்டு சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டார். கச்சேரியில் பாடுவது வேறு, ஆல் இண்டியா ரேடியோவில் பாடுவது வேறு, தூர்தர்ஷனில் பாடுவது வேறு என்று குறிப்பிட்டார்.


டாக்டர்.பத்மா சுப்ரமணியம் அவர்கள் தூர்தர்ஷனின் கலாச்சார சேவைகளை பாராட்டினார். ஆனால் தூர்தர்ஷன் இந்திய கலாசாரம் சம்பந்தமான பல இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் தான் ஒலிபரப்புவதாக வேதனை தெரிவித்தார். இதனால் பலர், குறிப்பாக சிறு குழந்தைகள் இத்தகைய நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்புகளை இழந்து விடுவதாக கூறினார். தன்னுடைய பல நடன நிகழ்ச்சிகளையே இதனால் பார்க்க இயலாமல் போனதாக அவர் கூறினார்.

அதனால் இத்தகைய நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் ஒலி/ஒளிபரப்ப வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் பேசிய எஸ்.வி.சேகர் அவர்கள், தூர்தர்ஷன் நாடக உலகிற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி பேசினார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று அரங்கில் (செட்) எடுத்து ஒளிபரப்பப்பட்ட நாடகங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்ததாக குறிப்பிட்டார். தற்பொழுது அந்த நாடகங்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் பேசும் பொழுது, சிவபெருமானின் திருமணம் கயிலாய மலையில் நடந்த பொழுது நிறைய மக்கள் அங்கு கூடிவிட்டதால், கயிலாய மலை தாழ்ந்துபோனது. தென் பகுதி உயர்ந்து போனது. இதனால் அகத்திய முனிவரை அழைத்து தெற்கே பொதிகை மலைக்கு சென்று நிலத்தை சமன் செய்யுமாறு கூறினார். அகத்திய முனிவரும் பொதிகை மலைக்கு சென்று, அங்கிருந்தாவாறே சிவபெருமானின் திருமணத்தை கண்டு ரசித்தாக குறிப்பிட்டார்.

தூர்தர்ஷனை நாட்டில் 33 கோடி மக்கள் கண்டு ரசிப்பதாக கூறினார். மேலும் அவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Mile Sur Mera Tumhara - காணொளி

High QualityMedium Qualityhttp://en.wikipedia.org/wiki/Mile_Sur_Mera_Tumhara

தூர்தர்ஷனை பற்றிய மற்ற வலைபூக்கள்
http://ddnational.blogspot.com/search/label/Doordarshan%20Theme%20Songs

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா பற்றிய மற்ற வலைபூக்கள்
http://etiroli.blogspot.com/2009/09/blog-post_19.html

Thursday, September 17, 2009

தாலசீமியா நோயால் அவதிப்பட்ட அக்காவை தன்னுடைய ஸ்டெம் செல் மூலம் காப்பாற்றிய தம்பிஇன்று தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி.

தாலசீமியா நோய்க்கு ஸ்டெம்செல் சிகிச்சை நாட்டிலேயே முதல் முறையாக சாதனை :

சென்னை:தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட, எட்டு வயது பெண் குழந்தைக்கு, ஸ்டெம் செல் மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற கோவையைச் சேர்ந்த பெண் குழந்தை, முழு ஆரோக்கியம் பெற்றுள்ளது.

மிகக் கொடூரமான பரம்பரை நோய்களில் ஒன்று தாலசீமியா. ரத்தக் குறைபாடு நோயான இது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை வழக்கத்திற்கு மாறான வடிவத்திற்கு மாற்றும் தன்மை கொண்டது.இக்குறைப்பாட்டால், ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் பாழ்பட்டு, தீவிர ரத்த சோகை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை, ஒவ்வொரு மாதமும் முழுமையாக மாற்ற வேண்டும். இந்நோயை சரியான முறையில் கவனிக்காமல் விட்டால், பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.


இந்நோய்க்கு ஒரே தீர்வாக, ஸ்டெம் செல் சிகிச்சை கருதப்படுகிறது. அதுவும், கனகச்சிதமாக பொருந்த 25 சதவீதம் மட்டுமே வாய்ப்பு.கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - சரோஜினி தம்பதியின் எட்டு வயது மகள் தாமிரபரணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, பெற்றோர் இவளை அழைத்து வந்தனர். இதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை தான் தீர்வு எனக் கருதிய டாக்டர் ரேவதி ராஜ், ஸ்டெம் செல்லுக்காக, செந்தில்குமார் தம்பதியை, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.


மருந்து போல், இன்னொரு குழந்தைக்கு கருத்தரித்தார் சரோஜினி. ஸ்கேன் செய்து பார்த்தபோது, அந்த கருவுக்கும் தாலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்களின் அறிவுரையின்படி, கரு கலைக்கப்பட்டது.


விடாமுயற்சியோடு, மீண்டும் 2008ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு தாலசீமியா பாதிப்பு இருக்கவில்லை. அக்குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஸ்டெம்செல்கள், சென்னையில் உள்ள லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன.


இரண்டு குழந்தைகளின் திசுக்களும் பொருந்துகிறதா, மேற்கொண்டு தாமிரபரணிக்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை உறுதிப்படுத்த, ஹெச்.எல்.ஏ., சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் முதல் படியாக, தாமிரபரணியின் உடலிலுள்ள அனைத்து எலும்பு மஜ்ஜை செல்களும், கீமோதெரபி மூலம் அழிக்கப்பட்டன. பின்னர், தம்பியின் ஸ்டெம் செல்கள் தாமிரபரணியின் உடம்பில் செலுத்தப்பட்டன.


சிகிச்சை முழு பலனளிக்கவே, தாமிரபரணி, தற்போது தாலசீமியா நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். இனி, அந்தக் குழந்தையும், மற்ற பிஞ்சுகளைப் போலவே துள்ளி விளையாடலாம்.


இது குறித்து, லைப்செல் இன்ட்நேஷனல் நிர்வாக இயக்குனர் மயூர் அபாயா கூறுகையில், ""ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகள் தாலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. உலகளவில் இது 10 சதவீதம். ஸ்டெம்செல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றத்திற்கு, நன்றி சொல்லும் தருணம் இது. தாலசீமியா மற்றும் லூகேமியா போன்ற பல்வேறு உயிர்கொல்லி நோய்களை, தற்போது அறுவை சிகிச்சையின்றி முழுவதுமாக குணப்படுத்தலாம்,'' என்றார்.தாமிரபரணியின் அப்பா செந்தில்குமார் கூறியதாவது:


என் மகள் தாமிரபரணிக்கு ஒன்றரை வயதிலிருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டிவிட்டது; விளையாட முடியாது; நடக்க முடியாது. கடந்த ஆறரை ஆண்டுகளாக, அவளுக்கு மாதம்தோறும் ரத்தம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, அப்பல்லோ மருத்துவனையில், என் மகள் தாமிரபரணிக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. தற்போது என் மகள் தாலசீமியா நோயிலிருந்து குணமடைந்துவிட்டாள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5ஆக உள்ளது. என் மகளை அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க உள்ளேன்.இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சைக்கு, எட்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னதும் மற்றவர்களின் உதவியை நாடினேன். தினமலர் நாளிதழில் இலவச விளம்பரமும் செய்யப்பட்டது. இதன் வழியாக பலர் மூலம் நிதி உதவி கிடைத்தது. பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிய மற்றும் வழிகாட்டிய அனைவருக்கும் என் நண்பர்களுக்கும் இந்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செந்தில்குமார் உருக்கமாக கூறினார்.

Dinamalar URL : http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17064

Tuesday, September 15, 2009

அறிஞர் அண்ணாவை பற்றி எங்கள் பள்ளி தமிழாசிரியர் அவர்கள் சொன்ன தகவல், "செவ்வாழை" - அறிஞர் அண்ணாவின் சிறுக‌தைஅறிஞர் அண்ணாவை பற்றி எங்கள் பள்ளி தமிழாசிரியர் திரு.செல்வராஜ் அவர்கள் சொன்ன தகவல்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியவர் அறிஞர் அண்ணா.

ஒரு முறை அண்ணா கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம். இரவு வெகு நேரமாகயும் அண்ணா வரவில்லையாம். கூட்டதிற்கு வந்தவர்கள் எல்லாம் தூங்க ஆரம்பித்து விட்டனராம்.

அண்ணா இரவு மணிக்கு கூட்டதிற்கு வந்தாராம். வந்தவுடன் அவர் மைக்கை பிடித்து

" மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களை தழுவுவதோ நித்திரை
மறவாது எமக்கு இடுவீர் முத்திரை"

என்று அடுக்குமொழியில் பேச ஆரம்பித்த உடன் மக்கள் அனைவரும் தூக்கத்திலிருந்து விடுபட்டு அண்ணாவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்களாம்.

மேலும் அண்ணாவை பற்றிய தகவல்களுக்கு
http://www.arignaranna.info/

Bonus: "செவ்வாழை" - அறிஞர் அண்ணாவின் சிறுக‌தை
நன்றி : சென்னை ஆன்லைன்
"செவ்வாழை" - அறிஞர் அண்ணாவின் சிறுக‌தை
செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும் தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டுவிட்டது.

செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர, அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். கரியனிடம் - அவனுடைய முதல் பையன் - காட்டியதைவிட அதிகமான அன்பும் அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.

"குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்-ரொம்ப ருசி-பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்" என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள் - அது மட்டுமா - பக்கத்துக் குடிசை - எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக்கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக்கொள்ள முடியும் - அப்பா வாங்கிய புதிய மோட்டரைப் பற்றியா, அம்மாவின் வைரத் தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன், "செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்" என்று சொல்லுவான்.

"ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா - நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும் - வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்"-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக்கொண்டே "உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றவாது பையன் முத்து, "சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா - பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு கண்டாங்க" என்று சொல்லுவான் - வெறும் வேடிக்கைக்காக அல்ல - திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக்கொள்வான் - செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும் செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்!

குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள் செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது - கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி, நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும் - குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு!

இதிலே பங்கு பெற பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும் - செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும் தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.

"இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?" கரியன் கேட்பான், ஆவலுடன் செங்கோடனை.

"இரண்டு மாசமாகும்டா கண்ணு" என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று - செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையைப் பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலை மதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும் சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமே 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று.

"எப்போது பழமாகும்?" என்று கேட்பாள் பெண்.

'எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன்.

செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம் - இடையே தரகர் இல்லை - முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக்கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது - அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும் - அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.

இரண்டு நாளில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான் - பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது - பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப் பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது - ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி.

இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது - எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது - இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா!

உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம் - பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான்.

செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும் போது, 'பழம்' தேவை என்று தோன்றாமல் இருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.

"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை-பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

"சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்? - வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!" என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், "நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க - அதைக் கொண்டுகிட்டு வரலாம்" என்றான். "சரி" என்றார் பண்ணையார்.

செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!

அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று - நாக்குக் குழறிற்று - வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை - என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை - அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை - இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல் - எனும் எதைத்தான் சொல்ல முடியும்?

கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக் குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா! - என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.

'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன் - மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன் - செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய்.

அப்பா! தங்கச்சிக்குக் கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னைக் கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!'-என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்!

எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். 'அப்பா, குலையை வெட்டப் போறாரு - செவ்வாழைக் குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான் - உள்ளே கொண்டு வந்தான் - அரிவாளைக் கீழே போட்டான் - 'குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். "கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன் - அழாதீங்க - இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கன்னு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்" என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான் - அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப் பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!

அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல - ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான் - எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள் - எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகு முத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான் - அவன் விற்றான் கடைக்காரனுக்கு - அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா - போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே.

செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழை மரத்துண்டுடன்.

"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?" என்று கேட்டான் கரியன்.

"இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட" என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். "எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று.

"எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம் - மரத்தை வெட்டி 'பாடை'யிலே கட்டி விட்டோம்" என்றான் கரியன்.

பாபம் சிறுவன்தானே!!

அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.

Friday, September 11, 2009

1996 ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் - அமீர் சோகைல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல்


1996 ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காலிறுதி போட்டியில் அமீர் சோகைல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல்.

1996 ம் ஆண்டிலுருந்துதான் கிரிக்கெட்டை புரிந்து பார்க்க ஆரம்பிதேன். இந்த போட்டியில் இந்தியா ஜெயிக்க கோவிலுக்கு போய் சாமியெல்லாம் கும்பிட்டதை இப்பொழுது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அமீர் சோகைல் VS வெங்கடேஷ் பிரசாத் காணொளி


குறிப்பு : இது ஜாவிட் மியான்தத்தின் கடைசி ஒரு நாள் போட்டி .
அஜய் ஜடேஜா, சித்து, ரஷித் லதிப் ஆகியோரின் ஆட்டங்களை காண கீழே உள்ள சுட்டிக்கு செல்லவும்.

Match Highlights -http://www.youtube.com/watch?v=o3T5zzuCDsY

Thursday, September 10, 2009

அமெரிக்க நடிகர் ஒருவர் பிரான்சில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு வருகை தந்த காட்சிஇன்று டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் பார்த்த செய்தி.

அமெரிக்க நடிகர் ஒருவர் பிரான்சில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு வருகை தந்த காட்சி.
இதுபோல் நம்மூர் நடிகர்கள் திரைப்பட விழாக்களுக்கு வருகை தந்தால் எப்படி இருக்கும்!!!!!

Wednesday, September 9, 2009

ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணம் - அவருடைய பயணம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆகும் செலவுகளை யார் ஏற்கிறார்கள்?எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.....

தற்பொழுது ராகுல் காந்தி தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பயணத்தின் நோக்கம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்ப்பதாகும். இந்த பயணம் மற்றும் அவருடைய பாதுகாப்பிற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சி ஏற்கிறதா அல்லது இதற்காக இந்திய மக்களின் வரிப் பணம் செலவிடப்படுகிறதா?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

Tuesday, September 8, 2009

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி பலிகர்நாடகா பிஜப்பூர் மாவட்டத்தில் தேவரனிம்பர்க் என்னும் கிராமத்தில் காஞ்சனா என்னும் 4 வயது சிறுமி 31-08-2009 திங்கள் கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டாள். அவள் 45 அடி ஆழத்தில் மாட்டிக் கொண்டாள். மீட்பு பணிக்கு 4 JCB இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அந்த இடத்தில பாறைகள் அதிகமாக இருந்ததால் மீட்பு குழுவினரால் ஆழ்துளை கிணற்றின் அருகில் விரைந்து பள்ளம் தோண்ட முடியவில்லை. அந்த இடத்தில மழை பெய்ததால் மீட்பு பணிகள் மேலும் தாமதமாயின. பாறைகளை தகர்க்க வெடி மருந்துகளை பயன்படுத்தினர். கடைசியில் 06-09-2009 ஞாயிறு காலை அவர்களால் சிறுமியின் உயிரற்ற உடலையே மீட்க முடிந்தது. இந்த மீட்பு பணி மொத்தம் 160 மணி நேரம் நீடித்தது.

ரூ.50000 செலவழித்து ஆழ்துளை கிணறு போடுபவர்கள், ரூ.50 செலவழித்து ஒரு இரும்பு மூடி போட்டிருந்தால் அந்த குழந்தையின் உயிர் போயிருக்காது. இனிமேலாவது அரசு தகுந்த சட்டங்களை இயற்றி இது போல நிகழாமல் தடுக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/bengaluru/kanchana%E2%80%99s-body-found-264

Monday, September 7, 2009

தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்துகளில் மூட்டைப் பூச்சிகள் தொல்லை


தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து - மூட்டை பூச்சி கடி

கண்டக்டரிடம் மூட்டை பூச்சி கடிக்கிறதே என்று கேட்டால், ரூ.1000 ஒதுக்கினால் ரூ.10 க்கு மட்டும் மருந்து அடித்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகள் சுருட்டி கொள்கின்றனர் என்று காரணம் சொல்கிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து எப்படி உருப்படும்? கர்நாடக அரசு சொகுசுப் பேருந்தை பார்த்தால் பளபள வென்று ஜொலிக்கிறது.
திருந்துவார்களா தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து அதிகாரிகள்?

இது குறித்த எனது முந்தைய பதிவை இந்த சுட்டியில் காணலாம்.

http://blogpaandi.blogspot.com/2009/07/blog-post.html

இன்று தினமலரில் வந்த செய்தி
அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மூட்டைப் பூச்சிகள் * அலர்ஜி ஏற்பட்டதால் போட்டிகளில் தோல்வி
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், மூட்டைப்பூச்சிகள் ராஜ்யம் நடத்துகின்றன. மதுரையில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் சென்ற மாணவியர், மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டு, போட்டியில் தோல்வியடைந்தனர்.தமிழக அரசு, தனியார் சொசுசு பஸ்களுக்கு இணையாக, அரசு போக்குவரத்து கழகம் மூலம், 2007ம் ஆண்டு முதல்,"அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ் இயக்கி வருகிறது.


தனியார் பஸ்களை விட 50 சதவீதம் குறைந்த கட்டணத்தில், அதே நேரத்தில் தனியார் பஸ்களில் உள்ள "ஏசி'., பேன், "எல்சிடி', "டிவி' உள்ளிட்ட சொசுகு வசதிகள் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டது."அலட்ரா டீலக்ஸ்' பஸ்கள் விட்ட துவக்க காலத்தில், பஸ்களை போக்குவரத்து கழகம் தினமும் பராமரித்து வந்தது. சட்டசபையில் கூட இம்மாதிரி பிரச்னையை தீர்க்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கூறப்பட்டது.


தற்போது,போதிய பராமரிப்பு இல்லாமல், பஸ்களில் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.கடந்த 2ம் தேதி, மதுரை வி.கே.கே., மெட்ரிக் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.


இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், ஓசூர் மகரிஷி மெட்ரிக் பள்ளி ப்ளஸ் 1 மாணவி சுமத்ரா (16), கீர்த்திப்ரியா (16) ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவிலும், டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கீர்த்திகா ராஜன், சப்-ஜுனியர் பிரிவிலும், விளையாட சென்றனர். செப்.,1ம் தேதி இரவு, ஓசூரில் இருந்து மதுரை சென்ற அரசு "அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ்சில் உறவினர்களுடன் சென்றனர்.


பஸ்சில் பயணம் செய்த சிறிது நேரத்தில், சீட்டுகளுக்கு அடியில் இருந்த மூட்டை பூச்சிகள், மாணவியர் உள்ளிட்ட பயணிகளை பதம் பார்த்தது.இதனால், இரவு முழுவதும் மாணவியர் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மறுநாள் காலை மதுரை சென்றதும், மாணவியர் சுமத்ரா, கீர்த்தி ப்ரியா ஆகியோருக்கு மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டது. தூக்கமின்மையால் அவர்களுக்கு பெரும் களைப்பும் உண்டாகி விட்டது.


"தேசிய போட்டியில் வெற்றி பெற வேண்டும்' என்ற கனவுடன் மதுரை சென்ற மாணவியர், உடல் நிலை ஒத்துழைக்காததால், தோல்வி அடைந்தனர். மாணவி கிருத்திகா ராஜன் மட்டும் வெற்றி பெற்றார். பாதிக்கப்பட்ட மாணவி சுமத்ரா கூறியதாவது:சிறு வயதில் இருந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று உள்ளேன். கடந்த முறை இதே போட்டியில் சீனியர் பிரிவில் விளையாட சென்ற நான், தங்கப்பதக்கம் பெற்றேன்.


இந்தமுறையும் நிச்சயம் தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நம்பினேன். அதற்காக தீவிர பயிற்சி எடுத்தேன். "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்சில் மூட்டை பூச்சி கடியால் கை, கழுத்து பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, என்னால் போட்டியில் விளையாட முடியவில்லை.தலை சுற்றியபடி வந்ததால், போட்டியில் தோல்வி அடைந்தேன். அரசு பஸ்சில் சென்றதால், பலநாள் பயிற்சி வீணாகி விட்டது.இவ்வாறுக மாணவி சுமத்ரா தெரிவித்தார்.

Sunday, September 6, 2009

அசத்த போவது யாரு நகைச்சுவை துணுக்குகள்

நேற்று இரவு (05-September-2009) சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சி பாத்தேன். இயக்குனர் சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒரு சிறுவன் முதலில் வந்த தன் மழலை குரலால் நகைச்சுவைகளை சொல்ல ஆரம்பித்தான்.
அதில் இரண்டு நகைச்சுவை துணுக்குகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நகைச்சுவை 1:
நபர் 1: வழக்கமா சினிமா படத்திற்கு வெத்தலை, பாகு, பழம் வைச்சு தானே பூஜை போடுவாங்க. ஆனா இந்த படத்திற்கு சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு வைச்சு பூஜை போடுறாங்களே. ஏன்?
நபர் 2: இது ஒரு மசாலாப் படம்.

நகைச்சுவை 2:
நபர் 1: அந்த படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் இஞ்சி மரப்பானோடு வர்றாங்களே. ஏன்?
நபர் 2: அந்த படத்தின் கிளைமாக்க்ஷை யாராலும் ஜீரணிக்க முடியலயாம்.

Friday, September 4, 2009

பம்மல் அர்க்கீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

பல்லாவரம்:சென்னை அருகே பம்மலில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான அர்க்கீஸ்வரர் கோவிலில், வசந்த மண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய போது, நேற்று ஒரே நாளில் 11 பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சென்னையை அடுத்த பம்மல், அண்ணா சாலையில் அமிர்தாம்பிகை சமேத அர்க்கீஸ் வரர் கோவில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், பல்லவர்கள் காலத்தில் எடுக்கப் பிக்கப்பட்டது.இங்கு சூரியம்மன், அமிர் தாம்பிகை, சித்தாலம்மன் உள் ளிட்ட பல சன்னிதிகள் உள்ளன. கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பரம்பரை அறங் காவலர் கோவிலை நிர்வகித்து வருகிறார்.இக்கோவில் வளாகத்தில் 60 அடிக்கு 30 அடி வீதம் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி இதற்கான பணிகள் துவங்கப்பட்டன.


பில்லர்கள் அமைப்பதற்காக 16 குழிகள் தோண்டப்பட்டன.நேற்று காலை 11 மணிக்கு ஊழியர்கள் 15வது குழியை தோண்டும் பணியில் ஈடுபட் டனர். அப்போது ஆறாவது அடியில் சிலை ஒன்று கண் டெடுக்கப்பட்டது.தொடர்ந்து அதே குழியில் அருகருகே சுவாமி சிலைகள் கிடைத்த வண்ணம் இருந்தன.


ஒரே நாளில் 34.5 கிலோ எடை கொண்ட பிள்ளையார் சிலை, 46.3 கிலோ சோமாஸ்கந்தர் சிலை, 19.3 கிலோ சோமாஸ்கந்தர் அம்மன் சிலை, ஒரு கிலோ கந்தர் சிலை, 36 முதல் 55 கிலோ வரை எடை கொண்ட மூன்று தனி அம்மன் சிலைகள், 26.4 கிலோ எடை கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை, 21.2 கிலோ எடை கொண்ட நடன கோலத்தில் உள்ள ஞானசம்பந்தர் சிலை, 28.2 கிலோ எடை கொண்ட மாணிக்கவாசகர் சிலை, 25.6 கிலோ எடை கொண்ட திருநாவுக் கரசர் சிலை ஆகிய 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


சிலைகள் கண்டெடுக்கப் பட்டது குறித்து தாம்பரம் தாசில்தார் கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தொல் லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாரிகள், சிலையை பார்வையிட்டு, ஐம்பொன் சிலை கள் என்று அறிவித்தனர். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சிலைகள் கிடைத்ததால், அதிகாரிகள் சிலையை மீட்டு, பராமரிக்கும் படி கோவில் பரம் பரை அறங்காவலரிடம் ஒப் படைத்தனர்.சிலைகள் உருவாக்கப்பட்ட காலம் குறித்தும், ஐம்பொன் சிலைகள் தானா என்பதை உறுதி செய்யவும் ஆய்வு நடத்த தொல் லியல் துறை முடிவு செய்துள்ளது.
Source : http://www.dinamalar.com/new/district_main.asp?ncat=Chennai#224426
Thanks : தினமலர்

Wednesday, September 2, 2009

கேரளா வாழைப்பழம்

அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................................


Tuesday, September 1, 2009

உலக சாதனை - டைட் ரோப் வாக்கர்சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ப்ரெடி நாக் என்பவர் ஜெர்மனி நாட்டில் உள்ள Zugspitze மலையில் அமைக்கபட்டுள்ள 995 மீட்டர் நீளமுள்ள ரயில் கேபிளில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் நடந்து டைட் ரோப் வாக் சாதனையை நிகழ்த்தினார். அவர் 348 மீட்டர் உயரம் அந்த இரும்பு கயிற்றில் மேல் நோக்கி ஏறினார்.இந்த சாதனை 30-08-2009 ஞாயிறு அன்று நிகழ்த்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர். இதன் மூலம் 13,300 யுரோ திரட்டப்பட்டு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

காணொளி


அறிவியல் பாட வினாத்தாளை சமூகஅறிவியல் ஆசிரியர் தயாரித்தால் எப்படி இருக்கும்?

ஒரு பள்ளியில் தேர்வு நேரத்தில் அறிவியல் ஆசிரியர் விடுமுறையில் சென்று விட்டார். உடனே சமூகஅறிவியல் ஆசிரியரை அழைத்து அறிவியல் பாட வினாத்தாளை தயாரிக்குமாறு தலைமை ஆசிரியர் கூறினர்.

சமூக அறிவியல் ஆசிரியர் எடுத்த வினாத்தாள் கீழ்கண்டவாறு இருந்தது.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

மகேந்திர வர்ம பல்லவனின் படம் வரைந்து பாகங்களை குறி.

நீதி: தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், எந்த வேலையை யார் சிறப்பாக செய்வார்கள் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும்.