அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
சுப்பிரமணியபாரதியார் பாடிய சரஸ்வதி துதி
வெள்ளைத் தாமரைப் பூவிl இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் உட் பொருளாவாள்!
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!
கீதம்பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!
இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!
வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,
வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,
வீரமன்னர் பின்வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்!
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!
உய்வமென்ற கருத்துடையோர்கள்
உயிரினுக் குயிராகிய தெய்வம்!
செய்வமென்றொரு செய்கையெடுப்போர்
செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!
கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!
செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத்தேட்டை
வரிசையாக அடுக்கி, அதன்மேல்
சந்தனத்தை, மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்!
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாதொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!
ஊணர் தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு
சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்
செல்வப்பாரசிகப்பழந்தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம்
கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?
போனதற்கு வருந்துதல் வேண்டா!
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத்தேன் மொழிமாதர்கள் எல்லாம்
வாணிபூசைக் உரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!