Tuesday, May 10, 2011

அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...

நன்றி : தினமலர் 

10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தையும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்!
ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகிறேன்.
கன்னியாகுமரியில், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன், குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர்.
இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர்கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்!
ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார்கள்.
அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா!

மேலும் படிக்க 


4 comments:

Chitra said...

ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.


..... :-(

மதுரை சரவணன் said...

நியாயமான உங்கள் குரல் கேட்கிற இடம் இது தான்.. அனைவரும் குரல் எழுப்புவர்.... அரசியல் எதில் எல்லாம்...?

துளசி கோபால் said...

:(

குடிகாரன் பேச்சு மட்டுமா பொழுது விடிஞ்சா போகும்?

blogpaandi said...

Chitra,
மதுரை சரவணன்,
துளசி கோபால்

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.