Saturday, December 12, 2009

ரேணிகுண்டா படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவம்


14-06-2009 அன்று கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.திருமண மண்டபம் உப்பிலியப்பர் கோயிலுக்கு எதிரிலேயே இருந்தது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், உப்பிலியப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று நண்பர் கூறினார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் கும்பகோணம் கிளம்ப மதியம் ஆகிவிட்டது. எனக்கு பெங்களூர் இரயில் மாலை ஆறு மணிக்கு தான் என்பதால், கும்பகோணம் சென்று ஏதாவது தமிழ் படத்திற்கு செல்லலாம் என்று நினைத்திருந்தேன். கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அருகே திரைஅரங்குகள் இல்லாததால், ஆனந்த விகடனை வாங்கி கொண்டு இரயில்வே ஸ்டேசனுக்கு சென்று விட்டேன்.

பெங்களூர் இரயில் ஆறு மணிக்கு வரும் என்பதால், எப்படி பொழுதை போக்குவது என்று யோசித்து கொண்டிருந்தேன். அங்கு புத்தகத்தை படித்து முடித்துவிட்டு நான்கு மணிக்கு முதலாவது நடை மேடைக்கு சென்றேன். அங்கு ஒரு இரயில் நின்று கொண்டு இருந்தது. இரயிலில் சென்னை To மும்பை என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படிருந்தது. கும்பகோணத்திலிருந்து மும்பைக்கு ட்ரெயின் இருக்கிறதா என்று ஆச்சர்யமடைந்தேன்.அந்த இரயிலின் அருகே பலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு சண்டை காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். படப்பிடிப்பு நடக்கும் நடைமேடையில் காமெராவில் படுவது போல ஆங்காங்கே தெலுங்கு விளம்பர பலகைகளை வைத்திருந்தார்கள். நான் அருகிலிருந்தவரிடம் இந்த படத்தின் பேர் என்ன என்று கேட்டேன். அவர் ரேணிகுண்டா என்று கூறினார். பேரை கேட்டதும் நான் அது ஒரு தெலுங்கு படம் என்று நினைத்து கொண்டேன்.

ஓடும் இரயிலில் சண்டையிடும் ஒரு இளைஞர், வெளியே பறந்து வந்து விழுவது போல் காட்சி.

அந்த இளைஞரை பார்க்க பரிதாபமாக இருந்தது. வெயிலில் முகம் கருத்து, அழுக்கான உடை அணிந்து இருந்தார். அவருடைய இடுப்பில் கயிறு கட்டி இருந்தது. இரயில் பெட்டி வாசலின் முன்புறம், அவர் படுக்கை வசத்தில் கயிற்றின் உதவியால் கிடைமட்டமாக மிதந்து கொண்டிருந்தார். கைகளை தலையின் பின்னால் கொண்டு சென்று, பின் நீச்சல் அடிப்பது போல் கைகளை மேலும் கீழும் மெதுவாக அசைக்க வேண்டும் என்று அந்த இளைஞரிடம் இயக்குனர் கூறினார். இடுப்பில் மட்டுமே கயிறு கட்டி இருந்தாதால், இளைஞரால் தலையையும், காலையும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அதனால் கிடைமட்டமாக இல்லாமல், சில சமயம் தலை அல்லது /----\ கால் பகுதி கீழ்ப்க்கம் சாய்ந்தது. அதனால் காட்சி சரியாக வரவில்லை. இயக்குனர் இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு காட்சியை OK செய்தார். அதுவரை அந்த இளைஞர் சிரமத்துடன் கிடைமட்டமாக தொங்கிகொண்டு இருந்தார். காட்சி சரியாக வரும் வரை இயக்குனர் அந்த இளைஞரை திட்டிக் கொண்டே இருந்தார்.

அப்பாடி காட்சி முடிந்தது, அந்த இளைஞரை இப்பொழுதாவது கயிற்றிலிருந்து கீழே இறக்குவார்கள் என்று நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். ஆனால் இயக்குனர் அடுத்த ஷாட்டுக்கு குழுவை தயார் செய்து கொண்டிருந்தார். அது என்ன ஷாட் என்றால், ஏற்கனவே பிரண்ட் வியூவில் எடுத்த காட்சியை டாப் ஆங்கிளில் படமாக்குவது. இதற்காக ஒரு கேமராவை கிரேனில் இணைத்திருந்தார்கள். அந்த கேமராவை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தார்கள். கேமராவில் எடுக்கப்படும் காட்சி இயக்குனரின் அருகில் இருந்த டிவியில் தெரிந்தது. கேமரா கிரேன் இளைஞரின் தலைக்கு மேலே வந்தது. இப்பொழுது டாப் ஆங்கிளில் படமாக்குவதால் இளைஞரின் முகம் தெரியும். அதனால் சரியாக எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு இந்த காட்சியும் OK ஆனது. அதுவரை அந்த இளைஞர் படும் கஷ்டம் பார்க்க கொடுமையாக இருந்தது. ஸ்டண்ட் கலைஞர்கள் இப்படிதான் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இதற்கிடையே நேரம் ஆறு மணி ஆகிவிட்டதால் நான் பெங்களூர் இரயிலை பிடிக்க இரண்டாவது நடை மேடைக்கு சென்று விட்டேன். கடந்த வாரம், ரேணிகுண்டா பட விமர்சனத்தையும், புகைப்படங்களையும் வலைபூக்களில் பார்த்த பொழுது தான் அது தமிழ் படம் என்றும், சண்டை காட்சியில் நடித்த இளைஞர் தான் படத்தின் ஹீரோ என்றும் தெரிந்தது.

படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

No comments: