சுதந்திர தினம் - பள்ளி மலரும் நினைவுகள் .....
பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் எவ்வாறு சுதந்திர தினம் கொண்டாடினோம் என்பதை இங்கே நினைத்து பார்க்கிறேன்.
ஒத்திகை
சுதந்திர தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குழுவாக பாடுவதற்கான ஒத்திகையை ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் அபஸ்வரமாக பாடிவிடக் கூடாது அல்லவா!...
காலை வேளையை தவிர மாலையிலும் பிரேயர் நடக்கும். தமிழ் தாய் வாழ்த்து, கொடிப் பாடல், தேசிய கீதம் அனைத்தையும் சரியாக பாடினால் மட்டுமே பிரேயர் முடியும் . இல்லை என்றால் தலைமை ஆசிரியர் திருப்தி அடையும் வரை திரும்ப திரும்ப பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
அனைவரும் ஒரே சீராக பாட வேண்டும். ஆனால் சில சமயம் முன் வரிசையில் உள்ளோர் வேகமாகவும் , பின் வரிசையில் நிற்பவர்கள் மெதுவாகவும் பாடுவார்கள். இல்லை என்றால் ஆண்கள் வேகமாகவும், பெண்கள் மெதுவாகவும் பாடுவார்கள். இந்த குறைகளை எல்லாம் சரி செய்து அனைவரையும் ஒழுங்காக பாட வைப்பார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் தலைமை ஆசிரியர் கொடி ஏற்றி , சரியாக கொடி ஏற்ற முடிகிறதா , கொடி சரியாக பறக்கிறதா என்று சோதித்துக் கொள்வார். சில நாட்களில், காற்று வீசாமல் கொடி சுருண்டுகொள்ளும். நாங்கள் சுதந்திர தினம் அன்று கொடி நன்றாக பறக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வோம் .
சுதந்திர தினத்தன்று .....
தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் பள்ளி தலைவன் உறுதிமொழி சொல்ல அனைவரும் பின்தொடர்ந்து உறுதிமொழி சொல்வார்கள். உறுதிமொழி சொல்லும் போது அனைவரும் வலது கையை 45 டிகிரி கோணத்தில் நீட்டி நெஞ்சுக்கு நேரே மடக்கி உறுதிமொழி சொல்வோம்.
பின்னர் பள்ளி தலைவன் இராணுவ நடை நடந்து சிறப்பு விருந்தினருக்கு வணக்கம் செலுத்தி அவரைக் தேசியக்கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொள்வான். அப்போது தேசியக்கொடியில் கட்டி வைக்கப்படிருந்த மலர்கள் யாவும் சிறப்பு விருந்தினர் மேலும் , அருகிலுள்ளோர் மேலும் விழும். பின்னர் கொடிக்கு வணக்கம் செலுத்தி விட்டு கொடிப் பாடல் பாடுவோம்.
பின்னர் சிறப்பு விருந்தினர் சுதந்திர தினத்தின் சிறப்புகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து வந்திருக்கும் தியாகிகளுக்கு சிறப்பு செய்வார். பின்னர் பள்ளியிலிருந்து ஒரு மாணவன் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி சொற்பொழிவாற்றுவான் . கடைசியாக தேசிய கீதத்தை பாடியவுடன் விழா இனிதே நிறைவுறும்.
குறிப்பு:
இதனிடையே சில மாணவ மாணவிகள் காலையில் வீட்டில் ஒன்றும் சாப்பிடாமல் வந்து இருப்பார்கள். காலை வெயிலில் நீண்ட நேரம் நிற்கும் போது
மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவார்கள். அவர்களை தனியே ஓரமாக உட்கார வைத்து சூடாக தேநீர் வாங்கி தருவார்கள். பின்னர் விழா முடிந்ததும் ஆசிரியர்கள் வழங்கும் இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம்.
கொடிப் பாடல்
தாயின் மணிக்கொடி
பாரீர்...... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் மூவர்ணங்களோடு......
2 comments:
நல்ல நினைவுகள்
பள்ளி நினைவுகள் மீண்டும் கண்முன் ......
sure,its nice
Post a Comment